பிரிஸ்பேன் ஒருநாள்: இந்தியாவை வென்றது இலங்கை!
இப்போட்டியில் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேவாக் தலைமையிலான இந்திய அணி, 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 66 ரன்கள் சேர்த்தார்; இர்பான் பதான் 47 ரன்களையும், ரெய்னா 32 ரன்களையும் எடுத்தனர்; கம்பீர் 29 ரன்களையும், சச்சின் 22 ரன்களையும் எடுத்தனர்; ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர். சேவாக் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகளையும், குலசேகர 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், மஹரூப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக திரிமன்னே 62 ரன்களையும், தில்ஷன் 51 ரன்களையும் சேர்த்தனர்; ஜெயவர்த்தன 45 ரன்களையும், சண்டிமால் 38 ரன்களையும் எடுத்தனர்.
மேத்யூஸ் சிறப்பாக பேட் செய்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.
பரேரா 10 ரன்களையும், சங்ககாரா 8 ரன்களையும் எடுத்தனர்; மெஹரூப் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் இர்பான் பதான், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யாதவ் மற்றும் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தத் தோல்வியின் மூலம், அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.



